இந்தியா

இந்தியாவில்‌‌ காடுகளின் ‌பரப்பு அதிகரிப்பு

இந்தியாவில்‌‌ காடுகளின் ‌பரப்பு அதிகரிப்பு

jagadeesh


ஆஸ்திரேலியாவில் காடுகள் அழிந்து வருவது கவலை அளித்தாலும், இந்தியாவில் சில மாநிலங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்திருக்கும் மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் காடுகள் ‌மற்றும் மரங்களின் பரப்பு, டெல்லி, கோவா‌ மாநிலங்களின் பரப்பளவுக்கு இணையாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் ‌‌ஆய்‌‌வறிக்கையில் தெரிய‌வந்துள்ளது. நாட்டின் வன வளத்தை இந்திய வன ஆய்வகம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்கிறது. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் காடுகள் மற்றும் மரங்கள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, கோவா மாநிலங்களின் பரப்பளவுக்கு சமமாக காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. தேசிய அளவில் காடுகளின் பரப்பளவு 3 ஆயிரத்து 976 சதுர கிலோ மீட்டரும், மரங்கள் பரப்பு ஆயிரத்து 212 சதுர கிலோ மீட்டரும் அதிகரித்துள்ளது. மாநில வாரியாக‌ வனங்களின் பரப்‌பளவு அதிகரித்ததில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது.

கர்நாடகாவில் ஆயிரத்து 25 சதுர கிலோ மீட்டரும், ஆந்திராவில் 990 சதுர கிலோ மீட்டரும், இமாசலபிரதேசத்தில் 334 சதுர கிலோ மீட்டரும் வன பரப்பு உயர்ந்துள்ளது. தமிழ‌த்தில் காடுகளின் பரப்பு ‌‌கடந்த‌ 2 ‌‌ஆண்டுகளில் 83 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது‌. தமிழகத்தில் மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகளின் பரப்பு குறைந்துள்ளது‌. ஒட்டுமொத்தமாக காடுகளின் பரப்பு அதிகரித்திருந்தா‌லும், ‌வடகிழக்கு மாநிலங்களில் ‌வனங்களின் பரப்பு 765‌ சதுர கிலோ மீட்டர் குறைந்துள்ளது.