இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியை எவ்வித தடையுமின்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பான ஒத்திகை தொடங்கியது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்துகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசியை எப்படி கொண்டு சேர்ப்பது? எங்கே தடுப்பூசியை பராமரிப்பது? பராமரிப்பு கிடங்கில் இருந்து சுகாதார நிலையங்களுக்கு எப்படி தடுப்பூசியை கொண்டு செல்வது? உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த ஒத்திகையில் கண்காணிக்கப்படுகிறது. தற்போது தொடங்கியிருக்கும் இந்த ஒத்திகை மூலம், அதை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவை சரி செய்யப்படும்.
முதல்கட்டமாக ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடந்த ஆரம்ப கட்ட ஒத்திகையின் போது கோவின் செயலியில் குறிப்பிட்ட கிராமங்களின் PINCODEகள் ஏற்கவில்லை , தடுப்பூசி போட்ட பின்பு நோயாளிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனே அப்டேட் செய்ய முடியவில்லை என்பன உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் இந்த பணிக்காக நியமிக்கப்படும் ஐந்து சுகாதார பணியாளர்களில் யார் எந்த பணியை மேற்கொள்வது என்ற குழப்பம் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவற்றை சரி செய்யும் வகையிலான இரண்டாம் கட்ட ஒத்திகை நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், டெல்லியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகையானது நடைபெற்று வருகிறது.
சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 28 நாட்கள் இடைவெளியில் இரு முறை இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது.