இந்தியா

பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்தது இந்தியா

பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்தது இந்தியா

webteam

டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதர் சோஹைல் மஹ்மூத்தை நேரில் அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் வீர மரணம் அடைந்தனர்.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ள மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படை, கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த ட்வீட்டில், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். இந்த கொடூர தாக்குதலுக்கு பழிதீர்க்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். இதற்கு ஈடாக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் தூதர் சோகைல் மஹ்மூத் நேரில் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே முன்பு ஆஜரானார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

ஜெய்ஷ்- இ - முகமது பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே இந்த தாக்குதலை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றடந்தார் ராஜ்நாத்சிங்.