இந்திய - சீன எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இரு நாட்டு கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று 11 மணி நேரம் நடைபெற்றது.
இந்திய, சீன எல்லையை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் இரு நாடுகளும் சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
இதனைத் தணிக்கும் வகையில், இரு நாடுகளின் கமாண்டர்கள் அளவில் ஏற்கெனவே நடைபெற்ற 8 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில், இரண்டரை மாதங்களுக்கு பிறகு சீன பகுதியில் இரு தரப்புக்கும் இடையே நேற்று 9-ஆவது சுற்று பேச்சு நடைபெற்றது. சுமார் 11 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் எல்லைப் பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் ஒரே நேரத்தில் படைகளை திரும்பப் பெற வேண்டும் என இந்திய தரப்பு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அளவிலான இலக்குகள் எட்டப்படும் வரை எல்லை பகுதியில் தொடர்ந்து நமது படைகள் தொடர்ந்து நிற்கும் என்று ராணுவ தளபதி நரவானே இரு வாரங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.