தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் வீடியோ கேம், புத்தகம், ஆன்மீகம் என நேரத்தை செலவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்தியாவின் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு காஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதால் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாநில சுற்றுலாத்துறைக்கு சொந்தமான மாளிகையில் மெஹபூபாவும், அரசு விருந்தினர் இல்லத்தில் உமர் அப்துல்லாவும் தங்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்துவிட்ட நிலையில் வீடியோ கேம், புத்தகம், ஆன்மீகம் என முன்னாள் முதல்வர்கள் நேரத்தை செலவிட்டு வருவதாக இந்தியா டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பத்திரிகை செய்தியின்படி, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா வீடியோ கேம் விளையாடி தன்னுடைய ஓய்வு நேரத்தை செலவழித்து வருகிறார். அதேபோல் மெஹபூபா முஃப்தி, ஆன்மீகத்திலும் புத்தகம் படிப்பதிலும் நேரத்தை செலவழித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.