நாட்டில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும் நிலையில், நடமாடும் மின்சார தகன முறையின் மாதிரியை இந்திய தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியிருக்கிறது.
இதுதொடர்பான மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தகவல்: ரோபாரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம், நடமாடும் மின்சார தகன முறையின் மாதிரியை உருவாக்கியுள்ளது. இதில் மரத்துண்டுகள் பயன்படுத்தப்பட்ட போதிலும் புகை வெளிவராத வகையிலான தொழில்நுட்பத்தில் முதன்முறையாக உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பயன்படுத்தப்படும் மரத்துண்டுகளின் எண்ணிக்கையில் பாதி அளவு மட்டுமே இதில் உபயோகப்படுத்தப்படும் போதிலும், இதிலுள்ள வெப்பமூட்டும் தொழில்நுட்பத்தின் காரணமாக சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக விளங்குகிறது. திரி அடுப்பின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தகன முறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தயாரிப்பை உருவாக்கிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தொழில்துறை ஆலோசனை மற்றும் ஆதரவளிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில் இடையீடின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஹர்ப்ரீத் சிங், இந்த புதியமுறையில் 1044 டிகிரி செல்சியஸில் வரை வெப்பமடைவதால் தொற்று முழுவதும் நீக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ரதத்தின் வடிவில் உள்ள இந்த எரியூட்டியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் இதை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதில் கொண்டுச் செல்ல முடியும். மரத்துண்டுகளை அடிப்படையாகக் கொண்டு தகனம் செய்யும் பாரம்பரிய முறையில், 48 மணி நேரம் வரை தேவைப்படும் நிலையில், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் 12 மணி நேரத்தில் பணி முழுவதும் நிறைவடையும் என்று பேராசிரியர் ஹர்ப்ரீத் கூறினார். குறைவான மரத்துண்டுகள் பயன்படுத்தப்படுவதால் கரியமில வாயுவின் வெளிப்பாடு பாதி அளவாகக் குறைகிறது.
நமது நம்பிக்கைகள் மற்றும் மரக்கட்டைகள் மீது உடலை தகனம் செய்யும் பாரம்பரிய முறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழில்நுட்ப - பாரம்பரிய மாதிரியை உருவாக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த தகன முறை குறித்து கருத்துத் தெரிவித்த இதனை உருவாக்கிய சீமா பாய்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹர்ஜிந்தர் சிங் சீமா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் எந்த இடத்திற்கும் இதனை எளிதாக எடுத்துச் செல்லலாம் என்றும், தற்போதைய சூழலில் தகன இடங்களில் இடப்பற்றாக்குறையினால் மக்கள் அவதிப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகளை நீக்குவதில் இந்த புதிய முறை உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.