இந்தியா

26 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட இடுக்கி அணை

26 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட இடுக்கி அணை

webteam

இடுக்கி அணையில் நீர்வரத்து அதிகரித்து உடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவின் படி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செறுதோணி அருகே பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டது இடுக்கி அணை. 839 அடி உயரமுள்ள குறவன் மலை, 925 அடி உயரம் கொண்ட குறத்தி மலை ஆகிய இரு மலைகளை இணைத்து “ஆர்ச்” வடிவில் 1973ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை, ஆசியாவிலேயே முதல் ”ஆர்ச்” அணை என்ற பெருமை கொண்டது. 555 அடி உயரம் கொண்ட இந்த இடுக்கி அணை இந்தியாவின் மூன்றாவது பெரிய அணையாகவும் கருதப்படுகிறது. 72 டி.எம்.சி., நீர் கொள்ளவு கொண்ட இந்த அணை கேரள மின்சார வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. 

அணையின் நீரால் 780 மெகாவட் மின்உற்பத்தி செய்யப்படும் திறன் கொண்ட கொழமாவு, செறுதோணி ஆகிய மின்உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன. அணையின் மொத்த உயரம் 555 அடி என்றாலும், அணையின் மொத்த நீர்மட்டம் 2,400 அடி என கடல் மட்டத்திலிருந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இடுக்கி அணையின் உபரி நீர் வெளியேறும் மதகுகளை கொண்ட அணையாக செறுதோணி அணை விளங்குகிறது. அந்தவகையில் கடந்த 1992ம் ஆண்டு இடுக்கி அணை நிரம்பியதால் அணை திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழைக்காலம் துவங்கிய கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இடுக்கி மாவட்டத்தில் 192.3 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான மழைப்பதிவை விட 49 சதவீதம் அதிகமாகும். 

இதனால், 26 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டு இடுக்கி அணை நிரம்பியுள்ளது. 2,400 அடி கொண்ட இடுக்கி அணை தற்போது முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையின் உபரி நீர் வெளியேற்றப்படும் செறுதோணி அணையின் தாழ்வாரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இடுக்கி அணை நிரம்புவதால் இதுகுறித்த அவசர ஆலோசனை கூட்டம் கேரள மின்வாரிய அமைச்சர் எம்.எம்.மணி தலைமையில் இடுக்கியில் நடந்தது. இதில் இடுக்கி ஆட்சியர் ஜீவன்பாபு, இடுக்கி மக்களவை உறுப்பினர் ஜாய்ஸ்ஜார்ஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின்போது அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் நீரை திறக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதன்படி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் 26 ஆண்டுகளுப்பின் நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.