ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் அசார் உள்ளிட்ட 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேடுதல் பணியும் தீவிரம் அடைந்தது.
இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது, பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில், ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் அசார் தலைமையில் பயங்கரவாதிகள் 15 பேர் காஷ்மீர் எல்லையில் குவிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே ஜம்மு காஷ்மீரில் நடைபெற இருந்த மாதா யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூலை 25 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் மாதா யாத்திரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரில் பதட்ட நிலை காணப்படுகிறது.