இந்தியா

“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே

“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே

rajakannan

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீதான பாலியர் புகார் குறித்து மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘பொம்மலாட்டம்’,‘காலா’படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் மீது, இந்தி நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். நானா படேகர் மீதான அவரின் பாலியல் புகார் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பியது. தன் மீதான புகாரை மறுத்த நானா படேகர், அந்த நடிகைக்கு எதிராக வழக்கு தொடருவதாகவும் அறிவித்தார். நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீ சித்திக், இயக்குநர் ராகேஷ் சரங் ஆகியோர் மீது அந்த நடிகை   மும்பை காவல்நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். நீதிமன்றத்தை நோக்கி இந்த விவகாரம் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்தாக்கரே, “நானா படேகரை எனக்கு நன்றாக தெரியும். அவர் கொஞ்சம் அநாகரிகமானவர்தான். அவர் கிறுக்குத்தனமாக ஏதோ செய்வார். ஆனால், இதுபோன்ற காரியங்களை செய்வார் என நான் நினைக்கவில்லை. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் விசாரிக்கும். இதில், ஊடகங்கள் என்ன செய்ய இருக்கிறது?. #MeToo  ஒரு சீரியஸான விஷயம். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் ட்விட்டரில் விவாதங்கள் நடைபெற்று வருவது சரிதானா?” என்று கூறினார்.

மேலும், “மீ டூ விவகாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை போன்ற முக்கியமான பிரச்னைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சியாக இருக்கலாம். பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவிடம் வாருங்கள். குற்றவாளிகளுக்கு நாங்கள் பாடம் கற்றுக் கொடுக்கிறோம். அடக்குமுறைக்கு ஆளாகும் போது, பெண்கள் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், 10 வருடங்களுக்கு பிறகு அல்ல” என்றார் ராஜ்தாக்கரே.