இந்தியா

வேலை தருவதாகக் கூறி ஷார்ஜாவில் விற்கப்பட்ட இளம் பெண்

வேலை தருவதாகக் கூறி ஷார்ஜாவில் விற்கப்பட்ட இளம் பெண்

rajakannan

ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு ஷார்ஜாவில் விற்கப்பட்டுள்ளார்.

துபாயில் சேல்ஸ் வேலை என்று கூறி ஏஜெண்ட் ஒருவர் அவரை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்தப் பெண் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஷார்ஜாவில் உள்ள அலுவலகம் ஒன்றிற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர், ஒரு ஷேக்கிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர்தான் அந்தப் பெண்ணுக்கு தான் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், “சேல்ஸ்கேல் வேலை என்றுதான் என்னை அழைத்துச் சென்றார். ஆனால், என்னை ஷார்ஜாவில் ஷேக் ஒருவர் வாங்கி அங்கிருந்து பஹ்ரைனுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து ஓமனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை வீட்டு வேலை செய்யுமாறு வற்புறுத்தினார்கள். வேலை மிகவும் பளுவாக இருந்தது. என்னை மிகவும் துன்புறுத்தினார்கள். சரியாக உணவு கூட கொடுப்பதில்லை” என்றார். 

தன்னுடைய நிலை குறித்து எப்படியோ தனது அம்மாவிற்கு அந்தப் பெண் தகவல் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர். பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து செயல்பட்டு அந்தப் பெண்ணை மீட்டு இந்தியா கொண்டு வந்தனர். 3 வாரங்களாக அவதிபட்டுக் கொண்டு இருந்த அந்தப் பெண் தற்போது மீண்டும் ஐதராபாத்தில் உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், சுஷ்மா சுவராஜுக்கும் தனது நன்றியை அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் பலர் இதுபோல் ஏஜெண்டுகளால் அழைத்துச் செல்லப்பட்டு விற்கப்படும் சம்பவம் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்று பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்காக இந்திய அரசு 24 மணி நேர உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உதவி மையத்தின் வழியாகதான் உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐதராபாத் இளம் பெண் மீட்கப்பட்டுள்ளார்.