தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆடம்பர பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஸ்கின் மற்றும் ஹேர் கிளினிக்கில் தான் (skin and hair clinic) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் இந்த கிளினிக்கிற்கு முடிநீக்க (hair removal) சிகிச்சைக்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது முடி அகற்றும் செயல் முறைகளுக்காக, அந்தப் பெண் வாடிக்கையாளர் அணிந்திருந்த மோதிரத்தை சிறிய பெட்டி ஒன்றில் வைக்குமாறு, அக்கிளினிக்கின் பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிகிச்சைக்கு வந்தப் பெண் தனது மோதிரத்தை கழற்றி வைத்துவிட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பின்னர், அங்கிருந்து வீட்டுக்குச் சென்றப்பின்புதான், கிளினிக்கிலேயே மோதிரத்தை வைத்துவிட்டு வந்தது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. உடனடியாக அந்த கிளினிக்கிற்கு சென்று ஊழியர்களிடம் இதுபற்றி கேட்ட நிலையில், முறையான பதில் எதுவும் வரவில்லை என்று தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, தனது மோதிரம் தொலைந்தது குறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஸ்கின் மற்றும் ஹேர் கிளினிக் ஊழியர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் சிறிய பெட்டிக்குள் இருந்த மோதிரத்தை எடுத்து தனது பர்ஸில் வைத்ததைக் ஒத்துக்கொண்டார்.
எனினும் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்வோமே என்ற பயத்தில் அந்தப் பெண் ஊழியர் தான் எடுத்த மோதிரத்தை கழிவறையில் ( toilet commode) தூக்கி எறிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிளம்பர் ஒருவரை அழைத்து வந்து கழிவறையின் பைப்பில் இருந்து, காவல்துறையினர் மீட்டெடுத்தனர். மேலும், 30.69 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை திருடிய அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.