இந்தியா

இந்த உடைக்கு இவ்வளவு விலையா? கொரோனா நோயாளியை அலறவிட்ட மருத்துவமனை

இந்த உடைக்கு இவ்வளவு விலையா? கொரோனா நோயாளியை அலறவிட்ட மருத்துவமனை

webteam

கொரோனா வந்தாலும் வந்தது சில தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் செல்லவே முடியாத நிலை வந்துவிட்டது. ஏகத்துக்கும் மருத்துவச் சிகிச்சை கட்டணத்தை ஏற்றிவைத்திருக்கிறார்கள் என அவ்வவ்போது குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் ஹைதராபாத் மருத்துவமனை ஒன்றில் பிபிஇ எனப்படும் பாதுகாப்புக் கவச உடைக்கு 96 ஆயிரம் ரூபாய் கட்டணம் விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

52 வயதாகும் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர், அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 12 நாள் கட்டணமாக ரூ. 3,32,682 விதிக்கப்பட்டது. அதில் பிபிஇ பாதுகாப்பு உடைக்கு மட்டும் ரூ. 96,000 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜூலை 13 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு ஜூலை 25 ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்தப் பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஊழலுக்கு எதிராகப் போராடும் தன்னார்வலர் விஜய கோபால். "மற்ற மருத்துவமனைகளில் பிபிஇ உடைக்கு 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்கள்" என்கிறார். இதுதொடர்பாக அவர், பொது சுகாதாரத் துறையில் புகார் செய்திருக்கிறார்.