இந்தியா

பிச்சைக்காரர்கள் இல்லாத ஹைதராபாத் நகரம்

பிச்சைக்காரர்கள் இல்லாத ஹைதராபாத் நகரம்

webteam

தெலங்கான தலைநகர் ஹைதராபாத்தின் தெருக்களில் பிச்சை எடுப்பவர்களை, காவல் அதிகாரிகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

ஹைதராபாத்தில் நேற்று முதல் தெருக்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பவர்களால் பலவிதமான பிரச்னைகள் ஏற்படுவதாகவும், தேவையற்ற போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைதராபாத் நகரில் வரும் 28ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு 8வது உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் உட்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து  கோஷமஹால் பகுதியில் இருந்த சுமார் 400 பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து பேசிய ஹைதரபாத் காவல்துறை கமிஷனர் எம்.மஹேந்திர ரெட்டி இந்த நடவடிக்கைக்கு பல பிச்சைகாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், அதன் பின்பு இதனால் அவர்களுக்கு ஏற்பட போகும் நல்வாழ்வை பற்றி எடுத்து கூறியதும் அவர்கள் புரிந்துக் கொண்டார்கள் என்றும் கூறினார். இதுவரை ஹைதராபாத் நகரில் 6,000 பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.