இந்தியா

தெலங்கானா என்கவுன்ட்டர்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை..!

தெலங்கானா என்கவுன்ட்டர்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை..!

webteam

ஹைதராபாத்தில் நான்கு பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

ஹைதராபாத் அருகே, கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திலேயே என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். 

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஹைதராபாத் சென்ற 7 பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர். முதலில் நால்வரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மகபூப் நகர் மருத்துவமனைக்கு சென்ற அவர்கள், பின்னர் என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்திலும் விசாரணை நடத்தினர்.

இதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. மேலும், தெலங்கானா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட நால்வர் மீதும் உரிய ஆதாரங்களை வழங்காதது மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், இதே போன்ற குற்றங்களை புரிந்த பலர் சிறையில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னகேசவலுவின் மனைவி ரேணுகா கூறியுள்ளார். அதுவரை தனது கணவர் உடலை புதைக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.