இந்தியா

'என்னையே வேலையில இருந்து தூக்கிட்டியா'... ஹெச்ஆரை சுட்ட இளைஞர்

'என்னையே வேலையில இருந்து தூக்கிட்டியா'... ஹெச்ஆரை சுட்ட இளைஞர்

Rasus

பதவியிலிருந்து தூக்கியதால் தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியை (HR) இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்  மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் தினேஷ் ஷர்மா. இந்த அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றியவர் ஜோகிந்தர். இவர் அலுவலகத்தில் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவரை பதவியிலிருநது தூக்கியிருக்கிறார் தினேஷ் ஷர்மா. எனவே கோபமடைந்த ஜோகிந்தர், ‘என்னையே பதவியிலிருந்து தூக்கிவிட்டாயா’ அதற்கான விளைவுகளை நீ சந்திக்க நேரிடும் என பலமுறை தினேஷ் ஷர்மாவை எச்சரித்திருக்கிறார். ஆனால் ஜோகிந்தரின் எச்சரிக்கையை தினேஷ் ஷர்மா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதனிடைய தினேஷ் ஷர்மா நேற்று காலை அலுவலகத்திற்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது ஜோகிந்தர் தனது கூட்டாளி ஒருவருடன் பைக்கில் சென்றபடி தினேஷ் ஷர்மாவின் காரை இடைமறித்திருக்கிறார். ஆனால் தினேஷ் ஷர்மா காரை நிறுத்தாமல் தொடர்ச்சியாக இயக்கியிருக்கிறார். அப்போது தினேஷ் ஷர்மாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்ட ஜோகிந்தர், கூட்டாளியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர் தினேஷ் ஷர்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தினேஷ் ஷர்மா ஆபத்தான நிலையிலிருந்து தப்பித்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜோகிந்தர் மற்றும் அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.