மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வீட்டில் நேற்று கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நெற்றி மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், நெற்றியில் தையல் இடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட ஆய்வுகள் செய்யப்பட்டதில், அவரது நினைவாற்றலுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவரது உடல்நிலை மற்றும் மனநிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் ஒருநாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்திய போது, அவர் வீடு செல்ல விருப்பம் தெரிவித்ததால் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவ ஆய்வில் அவரை பின்னால் இருந்து ஏதோ தள்ளி இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மம்தா பானர்ஜி காயமடைந்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மம்தா விரைவில் நலம் பெற வேண்டுவதாக தெரிவித்திருந்தனர். மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மம்தா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.