இந்தியா

குர்மீத் உடன் தவறான உறவில்லை: தலைமறைவான ஹனிப்ரீத் பேட்டி

குர்மீத் உடன் தவறான உறவில்லை: தலைமறைவான ஹனிப்ரீத் பேட்டி

rajakannan

குர்மீத் ராம் ரஹீம் ஒரு அப்பாவி என்றும், அவருக்கும் தனக்கும் தவறான உறவில்லை என்றும் தலைமறைவான ஹனிப்ரீத் கூறியுள்ளார்.

ஹரியானா ஆசிரமத்தில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து ஹரியானாவின் சிர்சா பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் 38பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். கலவரங்கள் தொடர்பாக அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சானை கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால், ஹனிப்ரீத் தலைமறைவாகிவிட்டார்.

இதனையடுத்து, கைது செய்ய வாய்ப்புள்ளதால் முன் ஜாமீன் மனு கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹனிப்ரீத் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஹனிப்ரீத்தை போலீசார் தேடி வந்தனர். அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.

இந்த நிலையில் 36 நாட்களாக தலைமறைவாக இருந்த ஹனிப்ரீத் ‘இந்தியா டுடே’-க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். தனக்கும், குர்மீத்துக்கும் இடையில் தவறான உறவு இருந்ததாக அவரது கணவர் விஷ்வாஸ் குப்தா கூறியிருந்த குற்றம்சாட்டுக்கு ஹனிப்ரீத் மறுப்பு தெரிவித்தார்.

இந்தியா டுடேவிடம் பேசிய ஹனிப்ரீத், “எனக்கும் என் தந்தைக்கும் இடையிலான உறவு தூய்மையானது. மகளின் மீது தந்தை அன்பாக கையை வைக்க முடியாதா? ஊடகங்களில் என்னைப் பற்றி வரும் செய்திகள் பொய்யானவை. நான் ஒரு அப்பாவி. கலவரத்திற்கு என் மீது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்துகிறார்கள். கலவரம் நடந்த எந்த இடத்திலாவது என்னை பார்த்தீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சட்டப்படி என்ன செய்வதென்றே தெரியவில்லை. தந்தை குர்மீத் சிறைக்கு சென்ற பிறகு நான் நிற்கதியாகிவிட்டேன். உதவிக்கு யாருமில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எங்களது மூளை செயல்படவேயில்லை. எனது மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதை எப்படி சொல்வது. தற்போது சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறேன். நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளேன்” என்றும் அவர் கூறினார்.

ஒரு கடிதத்தில் அடிப்படையில் எப்படி ஒருவரை குற்றவாளி என்று தீர்மானிக்க முடியும் என்றும், தன்னுடைய தந்தை ஒரு அப்பாவி; அவரது கபடமற்ற தன்மை நிரூபிக்கப்படும் என்றும் ஹனிப்ரீத் கூறினார். மேலும், தேரா அமைப்பில் எந்தவொரு பெண்ணும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.