இந்தியா

'ஆப்' இன்றி அமையா உலகு 22: உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவும் செயலி!

'ஆப்' இன்றி அமையா உலகு 22: உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவும் செயலி!

EllusamyKarthik

மாறிவரும் உலக சூழலால் பெரும்பாலான மக்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது. வாக்கிங், ஜாகிங், சைக்ளிங், பாடி பில்டிங், யோகா என ஒவ்வொருவரும் தங்களுக்கு உகந்த பயிற்சியை மேற்கொண்டு வருவதும் உண்டு. இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக மேற்கூறிய அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தடைபட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. சிலர் அந்த தடைகளை உடைத்து பயிற்சியை மீண்டும் தொடங்கியிருக்கலாம். சிலர் அந்த தடையை தகர்க்காமல் கூட இருக்கலாம். இப்படியிருக்கும் சூழலில் அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடியே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது ‘ஹோம் வொர்க் அவுட்’ (Home Workout - No Equipment) என்ற கைபேசி செயலி. 

இந்த செயலி மூலம் எந்தவிதமான உபகரணமும் இல்லாமல் எளிய முறையில் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம் என இதன் பயனர்கள் சொல்கின்றனர். இந்த அப்ளிகேஷன் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். 

ஹோம் வொர்க் அவுட்!

இந்த செயலியை பயன்படுத்த ஒரு ஸ்மார்ட் போனும், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற முனைப்பும் மட்டும் போதுமானது. வேறெதுவும் தேவையில்லை. பயனர்களின் உடல் எடைதான் இங்கு மூலதனம். இந்த அப்ளிகேஷன்தான் பயனர்களுக்கு பயிற்சி கொடுக்கின்ற மாஸ்டர். ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கிய நலன் சார்ந்த மொபைல் போன் அப்ளிகேஷன்களை கட்டமைக்கும் நிறுவனமான லீப் ஃபிட்னஸ் இந்த செயலியை வடிவமைத்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் iOS பயனர்கள் இதனை இலவசமாக பயன்படுத்தலாம். 

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?

>போனில் இந்த செயலியை இன்ஸ்டால் செய்ததும் பயனரின் பாலினம் குறித்த விவரம் கேட்கப்படுகிறது. விருப்பமுள்ள பயனர்கள் தங்கள் பாலினத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இல்லையென்றால் ஸ்கிப் செய்து விடலாம். ஸ்கிப் செய்யும் பயனர்கள் தங்களுக்கான வொர்க் அவுட் கோல்களை தாங்களாகவே செட் செய்து கொள்ள வேண்டியுள்ளது. 

>பாலினத்தை தேர்வு செய்ததும் ஃபுள் பாடி, ஆர்ம், செஸ்ட், ஆப்ஸ் (Abs), லெக் மாதிரியான வொர்க் அவுட் ஆப்ஷன்கள் வருகின்றன. அதில் பயனர்கள் தங்களுக்கு வேண்டியதை செலக்ட் செய்து கொள்ளலாம். உதாரணமாக ஃபுள் பாடியை தேர்வு செய்தால் மசில் பில்ட் செய்ய, உடல் எடையை குறைக்க மற்றும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது தொடர்பான ஆப்ஷன்கள் வருகின்றன. அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொண்ட பின்னர் மோட்டிவேஷன் தொடர்பான விவரம் கேட்கப்படுகிறது. அதன்பின்னர் எத்தனை புஷ் அப் எடுக்க முடியும் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்றில் இருந்து அதிகபட்சம் பத்து வரையில் பயனர்கள் தங்களால் செய்ய முடிந்ததை தேர்வு செய்ய வேண்டும். 

>பின்னர் ஆக்டிவிட்டி தொடர்பான விவரங்கள் கேட்கப்படுகிறது. நாள் முழுவதும் டெஸ்க் வொர்க் செய்பவர், வொர்க் அவுட்டில் ஆர்வம் உள்ளவர் மாதிரியான கேள்விகள் இதில் உள்ளன. அதில் பயனர்கள் தங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் தினசரி வொர்க் அவுட்டுக்கான ஷெட்யூலை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து பயனர்கள் தங்களது உடல் எடை மற்றும் உயரத்தை பதிவு செய்ய வேண்டும். அதை செய்து விட்டால் வொர்க் அவுட் பிளானை இந்த செயலி தயாரித்து கொடுக்கிறது. 

>அந்த பிளானை ஸ்டார்ட் செய்தால் வொர்க் அவுட் ஆரம்பமாகிறது. ஜம்பிங் ஜேக்ஸ், புஷ் அப் என எளிமையான வொர்க் அவுட்கள் இதில் கொடுக்கப்படுகிறது. அதோடு தானியங்கு குரல் (Automated Voice) மூலம் பயிற்சியின் போது பயனர்களுக்கு உத்வேகம் கொடுக்கப்படுகிறது. பயிற்சியின் போது சில நொடிகள் ஓய்வும் தருகிறது இந்த செயலி. நிதானமாக பயிற்சி செய்ய விரும்பும் பயனர்கள் ஓய்வு நேரத்தை கூட்டிக் கொள்ளவும் முடியும். கூகுள் ஃபிட் மூலம் டிரேக் செய்வதற்கான பர்மீஷனை ஆப்ஷ்னலாக பயனர்களிடம் கேட்கிறது இந்த செயலி. 

>ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் மட்டும் சுமார் 100 மில்லியன் டவுன்லோடை இந்த செயலி கடந்துள்ளது. பெரும்பாலான பயனர்கள் பாசிட்டிவான ரிவ்யூவை கொடுத்துள்ளனர்.