இந்தியா

“விவசாயிகள் போராட்ட களத்தை மாற்றினால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” - அமித் ஷா

“விவசாயிகள் போராட்ட களத்தை மாற்றினால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” - அமித் ஷா

EllusamyKarthik

டெல்லி புராரி பகுதியில் இருந்து ராம் லீலா மைதானத்துக்கு போராட்ட களத்தை மாற்றினால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஆனால், 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அமித் ஷாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி புராரி பகுதியில் உள்ள நிகன்காரி மைதானத்தில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு 400 பேருக்கு மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் விவசாயிகளை தடுக்க காஸியாபாத், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட எல்லைகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். துணை ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து டெல்லியை சுற்றியுள்ள அனைத்து எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் நிலைமை மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் புராரி பகுதியில் இருந்து ராம்லீலா மைதானத்துக்குள் போராட்ட களத்தை மாற்றிக் கொண்டால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டன. ராம் லீலா மைதானத்துக்கு மாறினால், தங்களது போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்பு இருக்கிறது என்றும் விவசாயயிகள் சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.