இந்தியா

'கடற்கரையில் பிகினி அணியலாம், பள்ளியில் அல்ல’- பிரியங்காவுக்கு, பெண் எம்.பி பதிலடி

'கடற்கரையில் பிகினி அணியலாம், பள்ளியில் அல்ல’- பிரியங்காவுக்கு, பெண் எம்.பி பதிலடி

சங்கீதா

“பிகினியை கடற்கரையில் வேண்டுமானால் அணியலாம், பள்ளியில் அல்ல” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவுக்கு, கர்நாடக மாநில மாண்டியா தொகுதி எம்.பி. சுமலதா அம்பரீஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய, இந்துத்துவா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சில பள்ளி மற்றும் கல்லூரிகள் நிர்வாகம், மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி மறுத்தது. இதற்கு இஸ்லாமிய மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவர்கள் சிலர் காவித்துண்டு அணிந்து வந்தனர். இதனால் அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, பிகினியோ, ஜீன்ஸோ, முக்காடோ, ஹிஜாப்போ என்ன உடை அணிவது என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்ணுக்கு உள்ளது என்றும், இதனை அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது என்றும் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் நடிகையும், கர்நாடக மாநில மாண்டியா தொகுதி எம்.பி.யுமான சுமலதா அம்பரீஷ், பிரியங்கா காந்தி வத்ராவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ஹிஜாப் விவகாரத்தில் அதிகளவில் அரசியல் நடப்பதை பார்க்க முடிகிறது. இளம் மாணவ, மாணவிகளின் மனத்தில் தேவையில்லாத விஷத்தை விதைக்கின்றனர். கடற்கரையிலோ, நீச்சல் குளத்திலோ வேண்டுமானால் பிகினி அணிந்து கொள்ளலாம். பள்ளியில் அவ்வாறு அணிய முடியாது. 

பணியிடத்தில் உடை அணிவதற்கு என்று ஒரு நெறிமுறை இருக்கிறது. எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட நெறிமுறைகள் இருக்கிறது. இதனால் மதசார்பான நடவடிக்கைகளை வீட்டில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும், பள்ளியில் அவ்வாறு நடக்கக் கூடாது. அனைத்து தரப்பினருமே பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருகின்றனர். இதனால் அங்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. இத்தனை வருடமாக இந்த பிரச்னை எழவில்லை. இப்போது ஏன் இதனை பெரிதுபடுத்துகின்றனர். தேர்தல் நேரம் என்பதாலா?. இந்த விகாரத்தில் மாணவர்களின் வாழ்க்கையுடன் பலரும் விளையாடுகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.