இந்தியா

கர்நாடகா: ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் திறப்பு

கர்நாடகா: ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் திறப்பு

கலிலுல்லா

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

ஹிஜாப் அணிந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்காத விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பதற்றத்தை தணிக்க கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் கடந்த வாரம் மூடப்பட்டன. பதற்றம் ஓரளவு தணிந்த நிலையில் 10ஆம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகள் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கின. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் 10-ஆம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகளும் கல்லூரி வகுப்புகளும் இன்று தொடங்கின. பதற்றமான இடங்களில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

பல இடங்களில் வகுப்புகளுக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவிகள் தரப்புக்கும் ஆசிரியர்கள் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது. இவ்விவகாரத்தில் வாக்குவாதத்தை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதால் சிமொகாவில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை வகுப்பறைக்கு மாணவிகள் மதம் தொடர்பான ஆடைகளை அணிந்து வர தடைவிதித்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டிருந்தனர்.