இந்தியா

ஸ்டுவர்ட் பின்னியை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்.. பதிலடி கொடுத்த மயாந்தி லாங்கர்..!

ஸ்டுவர்ட் பின்னியை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்.. பதிலடி கொடுத்த மயாந்தி லாங்கர்..!

jagadeesh

கணவரை சமூக வலைத்தளமான ட்விட்டரில் கிண்டலடித்த நபருக்கு கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் மயாந்தி லாங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி. இவரது மனைவி மயாந்தி லாங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். பிரபல விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் மயாந்தி லாங்கர்.

மயாந்தி லாங்கரும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் பின்னியும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னியின் மகன்தான் ஸ்டுவர்ட் பின்னி. இந்திய அணிக்காக ஸ்டுவர்ட் பின்னி 6 டெஸ்ட் போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடைசியாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். இப்போது ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரது மனைவியான மயாந்தி லாங்கர் சமூகவலைத்தளமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்துவார். இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை தொகுத்து வழங்கிய பின்பு, அன்று தான் நிகழ்ச்சிக்காக அணிந்திருந்த உடையுடன் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் நெட்டிசன் ஒருவர் "இப்போதெல்லாம் ஸ்டூவர்ட் பின்னி எங்கே இருக்கிறார்" என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த வேறொருவர் " மயாந்தி லாங்கரின் துணிப்பைகளை சுமக்கிறார்" என்று கேலியாக பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மயாந்தி லாங்கர் " என்னால் எனது பைகளை எடுத்துச் செல்ல முடியும். ஸ்டுவர்ட் பின்னி தனது வாழ்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார், கிரிக்கெட் விளையாடுகிறார், எப்போதும்போல மகிழ்ச்சியாக இருக்கிறார். அவருக்குத் தெரியாத நபர்கள் போடும் கருத்துகளை பொருட்படுத்தமாட்டார்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.