இந்தியா

"ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை" - உ.பி. போலீஸ்

"ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை" - உ.பி. போலீஸ்

webteam

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

ஃபாரன்சிக் சயின்ஸ் லேபாரட்டரியின் தடயவியல் அறிக்கையை மேற்கோள் காட்டிய உத்தரபிரதேச மாநில கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார், அந்த பெண் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாக கூறியுள்ளார். பெண்ணிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் விந்தணுக்கள் இல்லை என்று தடயவியல் அறிக்கையில் தெரியவந்ததாக கூறினார். அந்தப் பெண்ணும் தனது வாக்குமூலத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து எதுவும் கூறவில்லை என்றும், தாம் அடிக்கப்பட்டதாக மட்டும்தான் கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக நல்லிணக்கத்தை குலைத்து, இன வன்முறையை தூண்ட சிலர் முயன்றதாக குற்றம்சாட்டிய அவர், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்பே அரசையும், காவல்துறையையும் குறை கூறியது மோசமானது என்றும் அவ்வாறு செய்தவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் கூறினார்.

பட்டியலினப் பெண் ஒருவர் கடந்த 14ஆம் தேதி ஹத்தராஸில் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் அவசர அவசரமாக இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள் இல்லாமல் காவல்துறையினர் தகனத்தை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் உறவினர்களின் விருப்பத்தின்படியே உடல் உடனடியாக தகனம் செயப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.