ஹரியானா மாநிலம் குருகிராம் - ஆல்வார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நூஹ் மாவட்டத்தில், கடந்த ஜூலை 31ஆம் தேதி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிசேக ஊர்வலம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் இந்த ஊர்வலம் சென்றபோது இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியதால் போலீசார் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனிடையே, இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவந்தனர். நூஹ் மாவட்ட வன்முறைக்கு பெரோஷ்பூர் ஜஹிர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மமன் கானும் முக்கியக் காரணம் என போலீசார் குற்றஞ்சாட்டியிருப்பதுடன், அவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மமன் கானுக்கு போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர், தனக்கு காய்ச்சல் இருந்தபடியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ’வன்முறை வழக்கில் தன் பெயர் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை. வன்முறை வெடித்தநாளில், தாம் நூஹ்வில்கூட இல்லை. தன்னைப் போலீசார் கைதுசெய்வதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று ஹரியானா நீதிமன்றத்தில் மமன் கான் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், நூஹ் மாவட்ட வன்முறை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மமன் கானை போலீசார் நேற்று (செப்.14) கைதுசெய்தனர். நூஹ் வன்முறையில் எம்.எல்.ஏ. மமன் கானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ. கான், இன்று நூஹ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முன்னதாக, நூஹ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர, மாநில அரசாங்கம் அந்த மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மொபைல் இணையம் மற்றும் மொத்த எஸ்எம்எஸ் சேவைகளுக்கும் தடை விதித்துள்ளது.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக பசு பாதுகாவலர் மோனு மானேஸர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.