இந்தியா

'பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிடுங்கள்' -ம.பி. பெண் அமைச்சர் காட்டம்

'பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிடுங்கள்' -ம.பி. பெண் அமைச்சர் காட்டம்

JustinDurai

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று மத்தியப் பிரதேசம் மாநில அமைச்சர் உஷா தாகூர் காட்டமாக பேசியுள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் அண்மையில் 4 வயதான சிறுமி ஒருவர் கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை இனி பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்று மத்தியப் பிரதேசம் மாநில சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் உஷா தாகூர் காட்டமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை மத்தியப் பிரதேச அரசு கடுமையாகவும் எச்சரிக்கையுடனும் கையாள்கிறது. நாட்டிலேயே பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதித்த முதல் மாநிலம் இதுவாகும். இதுவரை 72 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பிறகும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடப்பது சமூகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

நாம் முதலில் அறிவுசார் சமூகத்தை வளர்க்க வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என்று நான் முதலமைச்சரிடம் (சிவ்ராஜ் சிங் சவுஹான்) கோரிக்கை விடுக்கிறேன். இப்படிச் செய்தால்தான் மற்றவர்கள் அதைப் பார்த்து யாருடைய மகளையும் தொடுவதற்கு முன் ஆயிரம் முறை யோசிப்பார்கள்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: `ஆயுள் தண்டனையை ரத்துசெய்க’- போக்சோ குற்றவாளியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!