இந்தியா

கே.எம்.ஜோசப் நியமனத்தை மறுத்தது ஏன்? - மத்திய அரசு விளக்கம்

கே.எம்.ஜோசப் நியமனத்தை மறுத்தது ஏன்? - மத்திய அரசு விளக்கம்

rajakannan

நீதிபதி ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலிஜியத்தின் பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

ஜோசப்பின் பதவி உயர்வு உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களின் கீழ் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதித்துறையின் உயர்பதவிகளில் கேரள மாநிலத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் ஏற்கனவே உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜீயம் குழுவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை நிரப்புவதற்கு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் கே.எம்.ஜோசப் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜோசப் தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி நியமனம் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

கேரளாவைச் சேர்ந்த கே.எம்.ஜோசப் 2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியாக இருந்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இத்தகைய நிலையில், மாநில பிரதிநிதித்துவத்தை காரணம் காட்டி மத்திய அரசு கே.எம்.ஜோசப்பின் நியமனத்தை திருப்பி அனுப்பியுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியின் ஒப்புதலின் பேரிலே கே.எம்.ஜோசப்பின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.