உள்நாட்டு நிறுவனங்களிடம் ராணுவத் தளவாட கொள்முதலுக்கு ரூ.71,438.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை தொடர்பான கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். அந்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது:
ஆயுத தொழிற்சாலை வாரியத்தை (ஓஎப்பி) பெருநிறுவனமாக்குதல்: ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் ஊழியர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஏ, பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள், புதிதாக உருவாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்படுவர். அவர்கள் நியமன தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அயற்பணியில் அதற்கான படித் தொகையின்றி பணியாற்ற வேண்டும்.
ஓஎப்பி ஊழியர்கள் அனைவரும், பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள ஆயுத தொழிற்சாலை வாரியத்துக்கு மாற்றப்படுவர். அவர்களுக்கு மத்திய அரசின் ஊழியர்களுக்கான அனைத்து விதிமுறைகளும் பொருந்தும். அதன்படியே சம்பளம், படி, விடுமுறை, ஒய்வூதிய பலன்கள் இருக்கும்.
உள்நாட்டு நிறுவனங்களிடம் தளவாட கொள்முதலுக்கு முதலீடு: ராணுவ தளவாட கொள்முதலுக்கு ரூ.1,11,463.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க, ரூ.71,438.36 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 நிதியாண்டுகளில், விமானங்கள், ஏவுகணைகள், டேங்க்குகள், குண்டு துளைக்காத ஜாக்கெட், துப்பாக்கிகள், கடற்படை கப்பல்கள், ரேடார்கள் போன்ற தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்திய நிறுவனங்களுடன் 102 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட முதல் உள்நாட்டு தளவாட கொள்முதல் பட்டியலில், 101 பொருட்களும், 2வது பட்டியலில் 108 பொருட்களும் இடம்பெற்றன. இது இந்திய பாதுகாப்பு தளவாட தொழில்துறைக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
கர்நாடகாவில் கூடுதலாக புதிய சைனிக் பள்ளி கட்டும் திட்டம் இல்லை: கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் சைனிக் பள்ளி தொடங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அங்கு இன்னும் அதிக சைனிக் பள்ளிகள் திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. நாட்டில் தொண்டு நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகளுடன் இணைந்து சைனிக் பள்ளிகளை ஏற்படுத்தும் புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகள் அமலாக்கம்: பாதுகாப்பு படைகளின் போர் திறன்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர்குழு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய செயல் திட்டங்களை வகுத்து அமல்படுத்தி வருகிறது.
சிக்னல் படைப்பிரிவுகள், ராணுவத்தில் மேம்பட்ட பணிமனைகள் அமைத்தல், அமைதியான இடங்களில் உள்ள ராணுவ பண்ணைகள் மற்றும் தபால் நிறுவனங்களை மூடுதல், ராணுவத்தில் கிளார்க் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான தரநிலையை அதிகரித்தல் உட்பட ஏராளமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியா திட்டம் அமல்: பொதுமக்கள் வசிக்கும் ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதர்கள் மூலம் கழிவுகளை அகற்றும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. சமுதாய கழிப்பறைகள் கட்டுதல், திடக் கழிவு மேலாண்மை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கன்டோன்மென்ட் பகுதிகள் அனைத்தும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என சான்றளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்ட பணிகளில், அனைத்து கன்டோன்மென்ட் வாரியங்களும் பங்கெடுத்துள்ளன.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தளவாட உற்பத்தி: பல கொள்கை நடவடிக்கைகள் மூலம் ராணுவத்துறையில் மேக் இன் இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ராணுவ தளவாடத்தில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கிறது. பாதுகாப்பு தளவாட கொள்முதலில் இந்திய பொருட்களை வாங்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த 3 நிதியாண்டுகளில் ரூ. 2,15,690 கோடி மதிப்பில் 119 ராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும்.
தனுஷ் பீரங்கி, பாலம் அமைக்கும் டாங்க், டி-72 டேங்க்குக்கான தெர்மல் இமேஜிங் கருவி, தேஜஸ் இலகு ரக போர் விமானம், ஆகாஷ் ஏவுகணை, ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல், ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், அர்ஜூன் கவச மற்றும் மீட்பு வாகனம் போன்றவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டன' என்று இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.