இந்தியா

50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு : விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு : விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

webteam

விலையேற்றத்தை தடுக்கும் வகையில் 50 ஆயிரம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 

மகாராஷ்டிராவின் மொத்தவிலை சந்தையின் நிலவரப்படி வெங்காயம் கிலோ ரூ.11க்கு விற்பனை ஆகிறது. இதே நாள் கடந்த வருடம் ரூ.8.50க்கு விற்பனை ஆனது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த வருடம் 29 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இது தொடரும் பட்சத்தில் வரும் மாதங்களில் வெங்காயத்தின் விலை உச்சத்துக்கு செல்லும் என கூறப்படுகிறது.

வெங்காயம் அதிகளவு பயிரிடப்படும் மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வறட்சி காரணமாக எதிர்பார்த்ததைவிட ரபி பருவத்தில் விளைச்சல் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் மாதங்களில் வெங்காயத்தின் விலை உயரக்கூடும் என்பதால், விலை உயர்வைத் தடுக்க இருப்பு வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக மத்திய உணவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெங்காயம் பயிரிடம் மாநிலங்களில் வறட்சி நிலவுவதால் ஏப்ரல் முதல் நவம்பர் வரை வெங்காயத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும்  என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.