புதுச்சேரியில் பெண் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தன் மீது பாலின பாகுபாடு மற்றும் சாதிய தாக்குதல் நிகழ்த்தப்படுவதாக கூறி, நேற்று முன்தினம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “பெண் அமைச்சரின் விவகாரம் எனக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அரசியலில் எந்தப் பெண் பாதிக்கப்பட்டாலும் நான் வருத்தமடைவேன். ஆனால், சகோதரி சந்திர பிரியங்காவை பொருத்தவரை அவருக்கு இவ்வளவு பிரச்னை இருக்கிறது என்பதை ஒரு பெண் துணைநிலை ஆளுநர் என்ற முறையில் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஆனால், அவர் அப்படி சொல்லவில்லை.
முதலமைச்சர் ரங்கசாமியின் அமைச்சரவையில் பெண் அமைச்சர் இருக்க வேண்டும் என்பதற்காக சந்திர பிரியங்காவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ‘அவரது பணியில் தொய்வு இருக்கு, அவரது பணியில் திருப்தி இல்லை’ என்று கூறி, நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று முதல்வர் ரங்கசாமி விரும்பினார். அப்போதே நான் அவரிடம் ‘ஒரேயொரு பெண் அமைச்சர்தான் இருக்கிறார். அவரை அழைத்து பேசி பணியாற்ற சொல்லுங்கள். ஏனென்றால் அவர் வைத்துள்ள துறைகள் அனைத்தும் முக்கியமான துறைகள்’ என்று சொன்னேன். ஆனாலும் அவரது பணியில் திருப்தி இல்லை என்பதனால் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி என்னிடம் கேட்டுக் கொண்டார்.
இதில் என்ன வருத்தமென்றால் சந்திர பிரியங்கா சில காரணங்களை சொல்லியுள்ளார். அவர் சொன்னதுபோல அவர்களின் சாதியை பார்த்து எந்த தாழ்வு பிரச்னையும் இருந்ததாக நான் பார்க்கவில்லை. முதல்வர் ரங்கசாமி தனது கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் தனது சொந்த மகள்போலத்தான் அவரை பாவித்துள்ளார்.
கட்சியில் பல மூத்தவர்கள் இருந்தபோதும்கூட பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று ஒரு வாய்ப்பை கொடுத்தார். அதை சந்திர பிரியங்கா பயன்படுத்திக் கொள்ளவில்லை. புதிய அமைச்சர் பதவி ஏற்பு குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல இன்று புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த புதுச்சேரி சபாநாயகர் செல்வம், “3 நாட்களுக்கு முன்பே சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அரசாணை விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான இந்த அரசியல் குழப்பங்களால் புதுச்சேரியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.