இந்தியா

ம.பி அரசியல் குழப்பம்: விடுமுறையை ரத்து செய்துவிட்டு மாநிலம் திரும்பும் ஆளுநர்

ம.பி அரசியல் குழப்பம்: விடுமுறையை ரத்து செய்துவிட்டு மாநிலம் திரும்பும் ஆளுநர்

webteam

ம.பி.அரசில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு அம்மாநில ஆளுநர் லால்ஜி டண்டன் மாநிலம் திரும்புகிறார்.

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை என செல்வாக்கு மிக்க தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதனால் டெல்லி சென்றிருந்த மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விட்டு அவசரமாக போபால் திரும்பினார். இதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் அமைச்சரவையை கூட்டினார் கமல்நாத். இதில் 20 அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய கமல்நாத், மாஃபியா உதவியுடன் யாரும் தனது அரசை வீழ்த்துவதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார். இதனையடுத்து அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக 20 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே பாரதிய ஜனதாவும் தனது எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.

இந்நிலையில், ம.பி., காங்கிரஸ் அரசில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு அம்மாநில ஆளுநர் லால்ஜி டண்டன் மாநிலம் திரும்புகிறார்.