மகாராஷ்ட்ரா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 222 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, 54 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளன.
இதையொட்டி, புதிய தலைமுறை நிகழ்ச்சியின்போது தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணாவிடம் “I.N.D.I.A. கூட்டணிக்குள் பரப்புரையிலும், ஒற்றுமையிலும் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டிருந்ததா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் பேசுகையில்,
“பாஜகவை அமித்ஷா ஒன்மேன் ஷோவாக வழிநடத்துகிறார். ஆனால் அமித்ஷா சொல்வதை பிற கட்சிகளை சேர்ந்த அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே கேட்பது என்பது வேறு. காரணம் அங்கு CBI, ED இதெற்கெல்லாம் பயப்படவேண்டும். பல உத்திகளை பாஜக இப்படி கையாள்வார்கள். அதற்காக அவர்கள் கட்டுப்படலாம்.
ஆனால் எங்கள் கட்சியில் அனைவருக்குமே உரிமைக் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஜனநாயக ரீதியாக இயங்குவதில் தேர்ச்சியான செயல்பாடுகளளைக் கொண்டுள்ளோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த 2024 லோக்சபா தேர்தலில் 0.16% வாக்கு சதவிகிதம் மட்டுமே எங்களுக்கும் (இந்தியா கூட்டணி) அவர்களுக்கும் (என்.டி.ஏ. கூட்டணி) வித்தியாசம். அதுவே சீட் என்று பார்க்கையில், நாங்கள் (காங்.) 30 இடத்திலும் அவர்கள் (பாஜக) 17 இடத்திலும் வெற்றிபெற்றோம்.
இதை வைத்து கணித்தபோது, 6 மாத இடையே நடந்த இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்குள் கடுமையான போட்டி நிலவும் என நினைத்தோம். ஆனால் இன்றைய தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. நாங்கள் மிகவும் பின்னடைவில் உள்ளோம். இதற்கான காரணத்தை பார்க்கவேண்டும். தமிழ்நாடு பாணியில் பெண்களுக்கு உரிமைத்தொகைக் கொடுப்பது, இலவசங்களைக் கொடுப்பது என்பதை பாஜக செய்ததால் இந்த தேர்தலில் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்களோ என்பதே எங்கள் கணிப்பு” என்றார்.
கீழ் உள்ள இணைப்பில் இதை வீடியோவாக காணலாம்...