இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர் லால் நேரு பிறந்த தினமான இந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் கூகுள் தேடு தளம் தனது முகப்பு பக்கத்தில் இந்நாளின் சிறப்பை குறிப்பிடும் வகையில் ஏதேனும் ஒரு ஓவியத்தை பதிவு செய்வது வழக்கம். கடந்த சில வருடங்களாகவே கூகுள் ஒரு ஓவியப் போட்டியொன்றை அறிவித்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் படிக்கு குழந்தைகளிடம் இருந்து பெறப்படும் ஓவியங்களில் ஒன்றை தனது கூகுள் டூடுள் ஆக பதிவிடும்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள குழந்தைகளிடம் இருந்து 1.1 லட்சம் ஓவியங்கள் பெறப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு கூகுள் கொடுத்திருந்த தலைப்பு 'When I grow up, I hope …'. இதன் அடிப்படையில் ஹரியானாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி திவ்யான்சி சிங்கால் வரைந்த ஓவியமானது தேர்வு செய்யப்பட்டு இன்றைய கூகுள் பக்கத்தை அலங்கரித்துள்ளது. இந்த கார்ட்டூனுக்கு திவ்யான்சி ‘Walking trees’ எனப் பெயர் வைத்துள்ளார். இந்த ஓவியத்தின் பெயர் குறித்து சிறுமி திவான்சி, “நான் எனது பாட்டி வீட்டுக்கு செல்லும் போது நிறைய மரங்கள் பார்த்திருக்கிறேன். இப்போது அந்த வீட்டிற்கு அருகில் அந்த மரங்கள் இல்லை. அவை அனைத்தும் தற்போது வெட்டப்பட்டு விட்டன. அப்போது எனக்கு இந்த ஐடியா வந்தது. அத்துடன் நான் வளர்ந்த பிறகு மரங்களுக்கு கால் முளைத்து அவை நடந்தால் நாம் மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே தான் நான் இந்த ஓவியத்திற்கு இந்தப் பெயரை வைத்தேன்” எனக் கூறியுள்ளார்.
அவரது இந்தக் கற்பனையை கண்டு சிலிர்த்துப் போன கூகுள் திவ்யான்சி வரைந்த ஓவியத்தை இன்றைய கூகுள் டூடுளாக பதிவிட்டுள்ளது.