இந்தியா

கூகுள் முகப்பு பக்கத்தை அலங்கரித்த கொல்கத்தா பள்ளி மாணவனின் டூடுல்

கூகுள் முகப்பு பக்கத்தை அலங்கரித்த கொல்கத்தா பள்ளி மாணவனின் டூடுல்

JustinDurai

கொல்கத்தாவை சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி என்ற மாணவர் உருவாக்கிய 'India on the center stage 'என்ற டூடுல் முதல் பரிசு வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு முதல், 'டூடுல் ஃபார் கூகுள்' (Doodle for Google) என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு போட்டியை நடத்தி வருகிறது கூகுள். இதில் நன்றாக வரையப்பட்டுள்ள படங்களை கூகுள் நிறுவனம் டூடுல்களாக மாற்றி வருகிறது. இந்நிலையில் 'அடுத்த 25 ஆண்டுகளில் எனது இந்தியா’ என்ற கருப்பொருளில் 'டூடுல் ஃபார் கூகுள்' போட்டி அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் வெற்றி பெறுபவரின் டூடுல் இந்தியாவில் கூகுள் இணையதள முகப்புப் பக்கத்தில் நவம்பா் 14-ஆம் தேதி டூடுலாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான வெற்றியாளரை கூகுள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி என்ற மாணவர் உருவாக்கிய 'India on the center stage 'என்ற டூடுல் முதல் பரிசு வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்லோக் முகர்ஜி உருவாக்கியுள்ள இந்த டூடுல் கூகுள் முகப்புப் பக்கத்தில் இன்று முழுவதும் இடம்பெறும். மேலும் அந்த மாணவரின் கல்லூரிப் படிப்புக்கு ரூ. 5 லட்சம் கல்வி உதவித் தொகையும், மாணவரின் பள்ளிக்கு அல்லது தன்னாா்வ அமைப்புக்கு ரூ. 2 லட்சம் தொழில்நுட்ப தொகுப்பும் வழங்கப்படும்.

'டூடுல் ஃபார் கூகுள்' போட்டிக்காக இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டூடுல்கள் வந்ததாகவும், அதில் இறுதிப் போட்டியாளர்களாக  20 பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: ஒரு கிராமமே விற்பனைக்கு... ஆனால், விலை இவ்வளவுதானா?.. சுவாரஸ்ய பின்னணி!