அன்றாட சமையலில் நாம் உபயோகிக்கும் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாக பூண்டு உள்ளது. ஆனால், இந்தப் பூண்டு தற்போது வரலாறு காணாத வகையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உயர்ந்திருப்பதுதான் இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தற்போது ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.500 - ரூ.550 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விலை உயரத் தொடங்கிய நிலையில் தற்போது, ரூ.500யும் கடந்திருப்பதுதான் அனைவரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழை காரணமாக, தமிழகத்தில் பயிரிடப்பட்டிருந்த பூண்டு விளைச்சல் கடுமையாகச் சேதமடைந்தது. அதுபோல், ஆந்திரா, கர்நாடகாவிலும் மழை பாதிப்பால் பூண்டு உற்பத்தி குறைந்ததுடன், தமிழகத்திற்கான வரத்தும் குறைந்தது. எனினும், பூண்டின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் வட இந்திய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அவர்கள் பூண்டு விளைவிக்கப்படும் நிலங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியும் இரவுபகலாகக் காவல் பார்த்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சமையலின் மிக முக்கிய உணவுப் பொருளாகக் கருதப்படும் வெங்காயத்தின் விலையும் வரும்காலங்களில் உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபரில், வெங்காயம் விலை உயர்ந்தபோது நுகர்வோருக்கு உதவும் வகையில், சில்லறை சந்தையில் கிலோவுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் வெங்காய விற்பனையை மத்திய அரசு அதிகரித்தது. இந்த நிலையில், நாட்டிற்குள் வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளது. டிசம்பர் 8, 2023 முதல் வெங்காய ஏற்றுமதி தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் பொதுத் தேர்தல், குளிர்காலத்தில் குறைந்த வெங்காய உற்பத்தி, டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் வெங்காயம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.