சிறையில் செடிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாமியார் குர்மித் ராம் ரஹிமிற்கு நாளொன்றுக்கு 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ராம் ரஹிம் கடந்த மாதம் 28 ஆம் தேதி ரோத்தக் அருகே சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். பல லட்சம் சீடர்களைக் கொண்டுள்ள ராம் ரஹிம் சிறையில் காய்கறி விளைவிக்கும் செடிகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தக் காய்கறிகள் சிறைவாசிகளுக்கு சமைக்கும் உணவாக பயன்படுத்தப்படுகிறது.
நாளொன்றுக்கு 8 மணி நேரம் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள ராம் ரஹிமிற்கு சம்பளமாக நாள்தோறும் 20 ரூபாய் வழங்கப்படுவதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறைக்குள் இருக்கும் இந்தக் காய்கறி தோட்டத்தில் பணிகளை சில நாட்களுக்கு முன்பே ராம் ரஹிம் தொடங்கிவிட்டதாக சிறைத்துறை டிஜிபி கே.பி.சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுருசர் மொதியா கிராமத்தில் ராம் ரஹிம் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் தனது தந்தையுடன் விவசாயப் பணிகளில் துணையாக இருந்துள்ளார். ஏற்கெனவே விவசாயத்தில் ஆர்வமுள்ளவர் என்பதால் தோட்டப்பணிகளில் அவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.