மகாத்மா காந்தி தேசத்தின் புதல்வன் என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டவர் பிரக்யா சிங் தாக்கூர். இவர் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்’, ‘சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள்’, ‘கழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன்’ உள்ளிட்ட கருத்துக்களை பேசியதற்காக விமர்சனங்களுக்கு ஆளானவர்.
இந்நிலையில், காந்தியைக் குறித்து புதிய கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். “காந்தியும் நாட்டின் புதல்வன். இந்த மண்ணின் மைந்தன். கடவுள் ராமர், மகரானா பிரதாப், சிவாஜி மகராஜ் உள்ளிட்டோரும் இந்தமண்ணின் மைந்தர்கள்தான். நாட்டிற்காக பணியாற்றியுள்ள அனைவருமே மதிக்கத்தக்கவர்கள்தான். அவர்களது வழியை நாங்கள் பின்பற்றுவோம்” என கூறியுள்ளார்.
காந்தி தேசத்தந்தை என எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், பிரக்யா தாக்கூர் தேசத்தின் புதல்வன் என்று கூறியுள்ளார். இவர் மத்திய அரசு சார்பில் மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரக்யா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.