வி.பி.சிங் புதிய தலைமுறை
இந்தியா

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம் | தமிழ்நாட்டுக்கும் இவருக்குமான தொடர்பு என்ன தெரியுமா?

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலை, சென்னையில் இன்று திறக்கப்பட உள்ளது. அவருக்கும் தமிழகத்திற்குள் உள்ள தொடர்பு என்ன... விரிவாக பார்க்கலாம்...

PT WEB

வி.பி.சிங் நினைவு நாளை ஒட்டி சென்னை மாநிலக் கல்லூரி வாளகத்தில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ‘தமிழ்நாட்டில் ஏன் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் சிலை அமைக்கப்பட வேண்டும்? தமிழகத்திற்கும் அவருக்குமான பந்தம் என்ன?’ என்ற கேள்விகள் எழுந்தால் அதற்கான பதிலாக கிடைப்பது அவர் பிரதமராக இருந்த போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள். அவற்றை நினைவுகூரலாம்...

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியவர், காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் அமைத்தவர் வி.பி. சிங். அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். பெரியாரை தனது தலைவராக சூளுரைத்த வி.பி.சிங் தமிழக மக்களுடன் அனைத்து மாநில மக்களையும் நேசித்தார்.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய
முன்னணி கூட்டணி ஆட்சி அமைத்த போது பிரதமராக பதவியேற்றார் வி.பி.சிங். அப்போது கூட்டணியில் இருந்து திமுகவுக்கு தனது அமைச்சரவையில் இடமளித்தார். முரசொலி மாறன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.

1980 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கை தயாராகி இருந்தாலும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு மண்டல் கமிஷன் படி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு தேசிய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டை 1990ல் கொண்டு வந்தவர் வி.பி.சிங். இதன் காரணமாக அவரை ’மண்டல் கமிஷன் நாயகன்’ என முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழ்ந்தார்.

ஜனதா கட்சியில் இருந்த வி.பி.சிங்தான் கர்நாடகாவின் பெரும் எதிர்ப்பையும் மீறி 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். “இதன் அடிப்படையில்தான் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது” என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன்.

பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என சட்டத்தை கொண்டு வந்த பெருமையும் வி.பி. சிங்கையே சேரும்.