உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் நீக்கப்பட்டது குறித்து சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்கிறது. அம்மாநில சுற்றுலா தளங்கள் அடங்கிய கையேட்டை அரசு வெளியிட்டது. அதில் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் உத்தரப் பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாஜ்மஹால் நீக்கப்பட்டது குறித்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் தாஜ்மஹால் நீக்கம் மற்றும் அது தொடர்பான விமர்சனங்களை செய்திகளாக வெளியிட்டுள்ளது. இஸ்லாமியர் மன்னர் கட்டியதால் தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளதா? என சர்வதேச ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.