இந்தியா

வெளிநாட்டு நிதியுதவி பெற கோடிக்கணக்கில் லஞ்சம் - சென்னை உள்ளிட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு

வெளிநாட்டு நிதியுதவி பெற கோடிக்கணக்கில் லஞ்சம் - சென்னை உள்ளிட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு

ஜா. ஜாக்சன் சிங்

வெளிநாட்டு நிதியுதவியை பெறுவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் கைமாறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்லி, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பல தொண்டு நிறுவனங்கள், சேவை செய்தவற்கு பயன்படுத்தாமல் தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. அதுமட்டுமின்றி, சில தொண்டு அமைப்புகள் தங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியை தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் 2010-இல் மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியை பெறுவதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த புதிய சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மீறி, பல தனியார் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெற்று வருவதாகவும், அதற்காக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் கைமாறி வருவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் உத்தரவிட்டார். இதன்பேரில் டெல்லி, சென்னை, கோவை, மைசூர், ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல உள்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.