அரசியல் ஆதாயங்களுக்காக எனக்கு திருமணம் செய்து வைத்து பலிகடா ஆக்கிவிட்டனர் என்று விவாகரத்துக்கு வழக்குத் தொடர்ந்துள்ள லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்கள் திருமண விழாவில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், அப்போதைய ஆளுநர் சத்யபால் மாலிக் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். திருமண விழாவுக்காக போடப்பட்ட அலங்காரங்களும் பேசப்பட்டன.
திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆன நிலையில் விவகாரத்து கோரி, தேஜ் பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணை யை நவம்பர் 29 தேதி பாட்னா குடும்பநல நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. மனைவிக்கும் தனக்கும் மனப் பொருத்தம் இல்லை என்று அவர் காரணம் கூறியிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தபோதே, இது பொருத்தம் சரியாக இருக்காது என்று கூறப்பட்டதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் தேஜ் பிரதாப், 11 ஆம் வகுப்போடு படிப்பை முடித்தவர். ஐஸ்வர்யா ராய், டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை முடித்துள்ளார். இதனால் சரியான பொருத்தமாக இருக்காது என்று அப்போது கூறப்பட்டது. இருந்தும் சிலரின் சமாதானத்தை அடுத்து திருமணம் நடந்தது.
இந்நிலையில் தேஜ் பிரதாப், ’அரசியல் ஆதாயங்களுக்காக திருமணம் செய்து வைத்து என்னை பலிகடா ஆக்கிவிட்டனர்’ என்று பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘எங்களுக்கு பொருத்தமே இல்லை. இருவரும் வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள். எங்கள் வளர்ப்பும் கலாசாரமும் வேறுவிதமானது. நான் கல்யாணத்துக்கு தயாராகவே இல்லை. எனது உணர்வுகளை என் பெற்றோரிடமும் தம்பி மற்றும் சகோதரிகளிடம் சொன்னேன். ஆனால், அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. என் முடிவில் இருந்து இனி பின் வாங்க போவதில்லை. அம்பு எய்யப்பட்டு விட்டது. இனி, பிரதமரே தலையிட்டால் கூட மாறமாட்டேன்.
இந்த திருமணத்தின் மூலம் நானே எனக்கு சிக்கலை அழைத்துவருவேன் என்று நினைத்ததில்லை. இனி பழசை திரும்பி பார்க்க விரும்பவில்லை. சில கட்சித் தலைவர்கள் என் பெற்றோரை சமாதானப்படுத்தி இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். அவர்கள் மற்றும் என் குடும்பத்தினர் சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக, நான் பலிகடா ஆக்கப்பட்டேன். திருமணத்துக்குப் பிறகு எதிர்பார்த்தது போலவே, எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பலமுறை கசப்பான மோதல்கள் ஏற்பட்டன’ என்று தெரிவித்துள்ளார்.