ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தருவதாக வெளியான தகவலையடுத்து கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா நோயாளிகள் வெளியேறியதால் மருத்துவமனைகள் காலியாக காட்சி அளித்தன.
நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டினம் என்ற இடத்தில், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தரப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து மருத்துவமனைகளில் இருந்து கொரோனா நோயாளிகளை அழைத்துக்கொண்டு அவர்களின் உறவினர்கள் அங்கு சென்றுள்ளனர். பெருமளவிலான கூட்டத்தால், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்து வாங்க கொரோனா நோயாளிகளுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதனால் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.