இந்தியா

மத்திய பட்ஜெட் 2023: ரயில்வேத்துறையில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

மத்திய பட்ஜெட் 2023: ரயில்வேத்துறையில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

நிவேதா ஜெகராஜா

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே துறையினர் கோரிக்கைகள் என்னவாக இருக்கிறது? இதோ பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. அங்கெல்லாம் நவீன வசதிகள் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடில் 1 கோடிக்கும் அதிகமானோர் ரயில் பயண்படுத்துகின்றனர். இப்போது 3,100 கி.மீ ரயில் தண்டவாளங்கள் இருக்கிறது. கூடுதலாக இதை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது.

தென் மாவட்ட ரயில்கள் பலவும் தாம்பரத்தில் நின்று செல்கிறது என்பதால், தாம்பரத்தில் கூடுதலாக ஒரு நடைமேடையை உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அறிவித்த சில ரயில் திட்டங்கள் கிடப்பிலேயே இருக்கிறது. அதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக திண்டிவனம் – நகரி இடையேயான புதிய வழித்தட அறிவிப்பு, செஞ்சி – திருவண்ணாமலை இடையேயான புதிய வழித்தட அறிவிப்புகள் கிடப்பில் இருப்பதால் அதற்கு நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மாமல்லபுரம் – கடலூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை திட்ட அறிவிப்புகளும் வெளியிட வேண்டும். தினமும் சென்னை முக்கிய ரயில் நிலையங்களை, சுமார் 15 லட்சம் பேர் பயன்படுத்துவதால் அங்கெல்லாம் ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

கடந்த பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை. அதனாலேயே பல திட்டங்கள் இப்போதுவரை கிடப்பில் உள்ளன. இந்த வருடம் அவையாவும் அதிகமாக இருக்க வேண்டும்.

இத்துடன் இந்திய ரயில்வே, ஆகஸ்ட் 2023க்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையில், 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போதுவரை செகண்ட் சிட்டிங் எஙப்படும் அமர்ந்தபடியே பயணிக்கும் சேவையையே வழங்கி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் ரயில்கள், பிரீமியம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பதிலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இத்துடன் ரயில்வே பட்ஜெட் 2023 இல் 400-500 அரை-அதிவேக வந்தே பாரத் ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.