இந்தியா

சண்டிகர், அமிர்தசரஸ் விமான நிலையங்கள் மூடல்

சண்டிகர், அமிர்தசரஸ் விமான நிலையங்கள் மூடல்

webteam

இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் சண்டிகர், அமிர்தசரஸ் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் விமானப் படை அத்துமீறுவதை தடுக்கும் வகையில் இந்திய விமானப் படையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி ஜம்மு- காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட் விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு அந்த விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில்  சண்டிகர், அமிர்தசரஸ் விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் டேராடூன் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான் உள்ளிட்ட பல பகுதிகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடு எல்லை விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.