இந்தியாவில் முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் நடந்தது என முன்னாள் ராணுவத் தளபதி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரன்பீர், “முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எப்போது நடத்தப்பட்டது ? என ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்வி, செப்டம்பர் 2016 என அண்மையில் பதிலளிக்கப்பட்டது. நான் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை. அவர்களுக்கு அரசு தரப்பிலிருப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது. நான் தற்போது என்ன கூற வருகிறேன் என்றால் அந்தத் தகவல் உண்மைதான்” என்றார்.
முன்னதாக ராகுல் காந்தி பேசியிருந்த போது, ‘இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை நரேந்திர மோடி தனது சொந்த சொத்துக்களாக நினைக்கிறார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தபோது அவர் வீடியோ விளையாடினார். அவர் காங்கிரஸை அலட்சியப்படுத்தவில்லை, ராணுவத்தை அவமதிக்கிறார்’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்குலா, மன்மோகன் சிங் தலையிலான காங்கிரஸ் ஆட்சியில் 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் 2000ஆம் ஆண்டு 2 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.