2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் கோலாகலமாக நள்ளிரவு வரை கொண்டாடப்பட்டது. அதே வேளையில் சில இடங்களில் சண்டை சச்சரவுகளும் அரங்கேறின.
அந்த வகையில் உத்தர பிரதேசத்தை அடுத்து நொய்டா பகுதியில் நடந்த நியூ இயர் கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் வலுக்கட்டாயமாக செல்ஃபி போட்டோ எடுக்கச் சொன்ன விவகாரத்தில் இரண்டு குழுக்களிடையே பிரச்னை மூண்டிருக்கிறது.
அதன்படி கவுர் சிட்டியில் உள்ள முதலாவது அவென்யூவில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்திருக்கிறது. அதில் ஒரு குழுவை சேர்ந்த ஆண்கள் சிலர் பெண்களுடன் செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். இதனைக் கண்ட அந்த பெண்களின் கணவன்மார்களுக்கும் அந்த குழுவைச் சேர்ந்த ஆண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் அந்த நபர்கள் பெண்களை இழுத்து தாக்கவும் செய்ததால் தகராறு முற்றியிருக்கிறது. இதனை தடுக்க முயன்ற குடியிருப்பு வாசிகளும் காவலாளிகளும் இதில் காயமடைந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து நொய்டா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்துக்கு வந்து புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த இரண்டு பேரை கைது செய்திருக்கிறார்கள்.
இது குறித்து பேசிய குடியிருப்பு வாசியான அஜித்குமார், “கைதான நபரில் ஒருவர் கட்டாயப்படுத்தி பெண்களிடம் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார்கள். அவர்கள் மறுக்கவே அந்த பெண்களின் கணவர்களுக்கும் அந்த நபர்களுக்கும் இடையே சண்டை வந்திருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மற்ற குடியிருப்பு வாசிகள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவு, கைதானவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.