மாதிரி புகைப்படம் PT
இந்தியா

ம.பி: பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தையை வேண்டாம் என்று தூக்கி எறிந்த தந்தை

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்ற தந்தையே வேண்டாம் என தூக்கி எறிந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Jayashree A

இன்றைய காலகட்டங்களில் பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் என்று ஒரு பக்கம் பெண்கள் வளர்ந்துகொண்டு வந்தாலும், ஒரு சிலர் பெண்குழந்தைகள் என்றால் வெறுத்து ஒதுக்கத்தான் செய்கின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், ஹிரா நகரைச் சேர்ந்தவர் ரோஹித் யாதவ், இவரது மனைவி அனிதா. ரோஹித் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இத்தம்பதியருக்கு ஏற்கெனவே ஒன்னரை வயதில் ஒரு பெண்குழந்தை இருந்த நிலையில், இரண்டாவதாகவும் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதில் அதிருப்தி அடைந்த ரோஹித் இரண்டாவது பெண்குழந்தையை வெறுத்து ஒதுக்கி வந்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனிதா ஒரு வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்த சமயம் வீட்டில் தனியாக இருந்த ரோஹித், தனக்கு பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தையை ஒரு பெரிய பையில் போட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் சான்வர் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமானநிலையம் அருகே இருந்த புதருக்குள் குழந்தையை வீசிவிட்டு வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த அனிதாவிடம் குழந்தையை காணவில்லை என்று நாடகமாடியுள்ளார். பதறிய அனிதா உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் அங்கிருக்கும் சிசிடிவியை ஸ்கேன் செய்தபோது, ரோஹித் ஒரு பையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை கண்டு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இருப்பினும் ரோஹித், தான் மளிகை சாமான் வாங்க சென்றதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதில் திருப்தியடையாத போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்யவே... எங்களுக்கு முதலும் பெண்குழந்தை இரண்டாவதும் பெண்குழந்தை. அதனால் இப்படி செய்தேன் என்று தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ரோஹித் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போலீசார், சம்பவ இடத்தில் உடல் நலத்துடன் இருந்த குழந்தையை மீட்டு அனிதாவிடம் ஒப்படைத்தனர்.