டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7 ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே டெல்லியில் மத்திய அரசு மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே ஏழாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.போராட்ட காலத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் தோமர், நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் போது 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருவாய் உயரும் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடனான 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டாமல் தோல்வியில் முடிவடைந்தது.
7 கட்டப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து 8 கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் 2 நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.