இந்தியா

கொரோனாவால் இறந்த தந்தை.. அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் 5 மணி நேரம் அலைந்த மகன்

கொரோனாவால் இறந்த தந்தை.. அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் 5 மணி நேரம் அலைந்த மகன்

webteam

மும்பையில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த 65வயது இஸ்லாமிய நபரை அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.

இஸ்லாமியரான அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த புதன்கிழமை உறுதியாகியுள்ளது. சிறுநீரக செயலிழப்பு தொடர்பாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் உடல்நிலை சீரான நிலையில் மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா உறுதி என அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தந்தையை தங்களுடைய மத நம்பிக்கையின் படி அடக்கம் செய்ய அவரது மகன் முயற்சி செய்தும் கொரோனாவால் உயிரிழந்ததால் அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களிலும் இடம் மறுக்கப்பட்ட நிலையில் போரிவாலி பகுதியில் உள்ள கல்லறையில் குடும்பத்தினர் 8 பேர் கலந்துகொண்ட நிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து தெரிவித்த இறந்தவரின் மகன், தந்தையின் உடலை வைத்துக்கொண்டு 5 மணிநேரத்திற்கும் மேலாக அலைந்தேன். யாரும் உதவவில்லை. தொற்று பரவிவிடும் என அனைவரும் அச்சம் கொள்கின்றனர்.

கடைசியாக போரிவாலி பகுதிக்குச் சென்று அடக்கம் செய்தோம் என தெரிவித்துள்ளார். இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.