பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது சொந்த மாவட்டமான நாளந்தாவில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மக்களிடம் குறைகளை கேட்கும் ஜன்சபா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாலை 5 மணியளவில் அவர் அங்குள்ள காந்தி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார்.
விழா மேடையில் முதல்வர் நிதிஷ் குமாரும், சில அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காதவிதமாக அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. விழா மேடையில் இருந்து 15 முதல் 18 அடி தொலைவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் மக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் அங்கிருந்த போலீஸார் மற்றும் முதல்வரின் பாதுகாப்புப் படையினர் நிதீஷ் குமார் உள்ளிட்ட அமைச்சர்களை உடனடியாக சூழ்ந்து கொண்டு அவரவர் கார்களில் ஏற்றினர். பின்னர், அங்கிருந்த பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர். முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீஸார் ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவரது பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் போலீஸார் வெளியிடவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மோப்ப நாய்களுடன் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வெடித்தது சிறிய ரக வெடிகுண்டு என்பது தெரியவந்தது.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.