முகமது அசாருதீன்  முகநூல்
இந்தியா

EXCLUSIVE | “வெற்றி பெறாத அரசியல்வாதியா நீங்கள்?” - காங். வேட்பாளர் முகமது அசாருதீனின் பதில் என்ன?

நடைபெறவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுடன் புதிய தலைமுறையின் செய்தியாளர் நடத்திய கலந்துரையாடல்.

PT WEB

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுடன் புதிய தலைமுறை சார்பில் கலந்துரையாடினோம்

முகமது அசாருதீன்

தெலங்கானா தேர்தலின் தான் போட்டியிடுவதை குறித்து தெரிவித்த முகமது அசாருதீன், தன்னை விமர்சித்தவர்களுக்கும் பதில் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் தெரிவிக்கையில், “இது என்னுடைய மாநிலம். தேர்தலை எதிர்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஜுப்லி ஹில்ஸ் தொகுதியில் எங்கு சென்றாலும் மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித்தலைவர் ஓவைசி சிறுபான்மையினர் குறித்து மட்டும் பேசிவிட்டு, அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார். அவர் அப்படி இருக்க எப்படி என்னை தோல்வியடைந்த அரசியல்வாதி என்று அவர் கூற முடியும்?. நான் தெலங்கானாவைச் சேர்ந்தவன். மொரதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

இங்கு களத்தில் பணியாற்றுவதுதான் முக்கியமான ஒன்று. இங்கு பெரிய வீரர்களாக இருப்பார்கள். ஆனால் களத்தில் சரியாக விளையாட மாட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் ஓவைசி.

காங்கிஸை பொறுத்தவரை அனைத்து சமூக மக்களுக்கும் எல்லாவிதத்திலும் பணியாற்றுகிறது. ஆனால் ஓவைசியின் முக்கியமான வேலையே வாக்குகளை பிரிப்பதுதான். ஒரு சமூகத்தை அடிமட்டத்திற்கு கொண்டு செல்லதான் அவர் பார்க்கிறார். எனவே எந்த பதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. மக்களுக்கு பணியாற்றவே நான் விரும்புகிறேன்.

ஆகையால் நாங்கள் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதனால் யாருக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்பதை இறுதியாக கட்சி முடிவு செய்யும்.” என்று தெரிவித்தார்.